Wednesday, January 6, 2010

மொபைல் போன் தயாரிப்பில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள்


ஆப்பிள் நிறுவனம் ஐ–போன் தயாரித்து மொபைல் போன் பயன்பாட்டிலும் விற்பனையிலும் தனி சாதனை படைத்த பின்னர் மற்ற கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களும் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கியுள்ளனர்.
மொபைல் போன் நாளுக்கு நாள் முழுமையான ஒரு கம்ப்யூட்டராக இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும் இந்நாளில் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மொபைல் போன் தயாரிப்பில் இறங்கினால் இன்னும் பல கம்ப்யூட்டர் வசதிகளைப் பெரிய அளவில் மொபைல் போன்களில் எதிர்பார்க்கலாம்.

இன்டர்நெட் பிரவுஸ் செய்திடும் வசதி, இரு வழி வீடியோ கான்பரன்ஸ் வசதி, ஹை டெபனிஷன் மூவி என கம்ப்யூட்டர் இன்று வெற்றி கண்டிருக்கும் வசதிகள் பல மொபைல் போன்களில் கிடைக்கும் வாய்ப்புகள் உறுதியாகியுள்ளன.

இதனால் ஏற்கனவே மொபைல் போன் சந்தையில் தங்களை உறுதிப் படுத்திக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் நிறுவனங்களுக்கு இந்த கம்ப்யூட்டர் நிறுவனங்கள் நிச்சயம் புதிய வழி போட்டியைத் தருகின்றன. இந்த வகையில் முதலில் நுழைந்தது ஆப்பிள் நிறுவனம்.

ஏறத்தாழ ஒரே வகை போன் களுடன் தூங்கிக் கொண் டிருந்த மொபைல் போன் இண்டஸ்ட்ரியை புதிய வழிகளுக்கு இழுத்துச் சென்றது ஆப்பிள் ஐ–போன். பின் பெர்சனல் கம்ப்யூட்டரின் பல வசதிகள் மொபைல் போனுக்குள் நுழையத் தொடங்கின.

ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக மொபைல் போன் தயாரிப்பில் இறங்கவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்த ஏசர் நிறுவனம் எட்டு மாடல்களுடன் போன் விற்பனையில் அண்மையில் வந்துள்ளது. இன்னும் பல மாடல்கள் வர இருக்கின்றன. தூக்கிச் செல்வதற்கு எளிதாக நெட்புக் கம்ப்யூட்டர்களைத் தயாரித்த அசூஸ் டெக் மொபைல் போன்களையும் வடிவமைத்து வழங்குகிறது.

ஏசர் நிறுவனம் அண்மையில் நடந்த கருத்தரங்கில் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் ஈடுபட தன் நிறுவனம் வெகு நாட்கள் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய திருப்பத்தில் இன்னொரு திருப்பமும் ஏற்பட்டுள்ளது. பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு சிப்களை வடிவமைத்து தரும் நிறுவனங்கள் மொபைல் போன்களின் இயக்கத்திற்கான சிப்களையும் தரத் தொடங்கி உள்ளன. இன்டெல் தன் சிப்களைத் தர எல்.ஜி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

கம்ப்யூட்டர்களுக்கு கிராபிக்ஸ் கார்டுகளை வடிவமைத்துத் தரும் என்விடியா நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரித்து வழங்கும் மூன்று நிறுவனங்களுக்கு தன் டெக்ரா ப்ராசசரை வடிவமைத்துத் தர முன்வந்துள்ளது. இதே வேளையில் மொபைல் போனுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருவதிலும் போட்டி தோன்றியுள்ளது. மைக்ரோசாப்ட், கூகுள் மற்றும் இன்டெல் முன்னணியில் இந்த போட்டியை நடத்துகின்றன.

ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்


உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது.
இந்த புதிய முறையிலான சிகிச்சைக்கு “ரீனல் சிம்பதடிக் நெர்வ் அப்ளேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை முறையில், ஒயர் ஒன்று, சிறுநீரகத்திற்கு அருகில் இருக்கும் ரத்த குழாயினுள் செலுத்தப்பட்டு, மிதமான ஷாக் கொடுக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாறு, மூளையில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் தடுக்கப்படுகின்றன.

பிரிட்டனை சேர்ந்த அந்தோணி ஹென்றி(68) என்பவர் தான், அந்நாட்டில், முதன் முதலில் இந்த சிகிச்சையை செய்து கொண்டுள்ளார். இவருக்கு இந்த சிகிச்சை அளிக்க ஒரு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரிட்டனில் மொத்தம் 1.5 கோடி பேர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில், பாதி பேருக்கு, தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை.

நூற்றுக்கணக்கானோர், உயர் ரத்த அழுத்தத்தால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படாமல் தடுக்க, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையும் நிலவுகிறது. அத்தகையோருக்கு இந்த புதிய சிகிச்சை முறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று பிரிட்டன் டாக்டர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து, டாக்டர் மெல் லோபோ என்பவர் கூறுகையில்,

“இது, உயர் ரத்த அழுத் தத்திற்கான சிகிச்சை முறையில், மிகச் சிறந்த வளர்ச்சி’ என்றார்.

கை அசைவில் இயங்கும் டிவி


மனிதனுக்கு அறிவு அதிகம். அதேபோல சோம்பலும். எல்லா வேலையும் இருந்த இடத்திலேயே நடக்க வேண்டும் என்று பலர் விரும்புவார்கள். இன்னும் சிலர் கை அசைத்தாலே காரியம் நடக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.
அது போல எண்ணம் உடையவர்களின் ஆசையை நிறைவேற்ற புதிய டி.வி. வருகிறது. ஆமாம், இனிமேல் டி.வி.யை இயக்க ரிமோட்டை தேட வேண்டாம். இருந்த இடத்தில் இருந்து கையை அசைத்தால்போதும் டி.வி. இயங்க ஆரம்பித்து விடும்.

அமெரிக்காவின் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஆரஞ்சு வேல்லி நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான டி.வி. வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த டி.வி.யில் ஒரு 3டி கேமராவும், சென்சாரும் இணைக்கப்பட்டு இருக்கும்.

டி.வி.க்கான சுவிட்சை ஆன் செய்தால்போதும். மற்றபடி எல்லா வேலைகளையும் ரிமோட் இல்லாமல் கைஅசைவிலேயே செய்யலாம். கேமராவும், சென்சாரும் உங்கள் அசைவுகளுக்கு ஏற்ப டி.வி.யை இயக்கும். விரல்களை அசைப்பதற்கு ஏற்ப சானல் மாற்றவோ, சப்தத்தை கூட்டவோ குறைக்கவோ முடியும்.

அதேபோல வீடியோ கேம்ஸ் விளையாட நினைத்தாலும் உடல்அசைவு மூலமே விளையாடலாம். '3டி சமிக்ஞை' முறையில் இயங்கும் இந்த டி.வி. தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த கிறிஸ்துமஸ் பண்டிகையை இந்த டி.வி.யுடன் கொண்டாடலாம் என்று இதை தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.