Sunday, December 27, 2009

உலகில் முதலாவதாக ஏழுவகை இதய குறைபாடுகளுக்கு ஒரே ஆபரேஷன்

உலகிலேயே முதல் முறையாக இதயத்தில் ஏற்பட்ட ஏழுவிதமான கோளாறுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து சென்னை, மியாட் மருத்துவமனை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்தவர் நாராயணசாமி (53). மருந்து கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. நாராயணசாமிக்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருந்தது. இதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ளவில்லை. கடந்த மாதம் அவருக்கு அதிகமான மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனைக்கு வந்தார். நாராயணசாமியை, மியாட் மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாஷி பரிசோதித்தார். இதில், அவருக்கு இரண்டு பெரிய ரத்த நாளங்கள் மகாதமணியில் இருந்து ரத்தத்தை நுரையீரலுக்கு கொண்டு செல்வதும், "வென்ட்ரிக்கல் செப்டம்' எனப்படும் இதய அறைகளுக்கு இடையே துளை இருப்பதும், "ஏட்ரியல் செப்டம்' எனப்படும் இதய அறைகளுக்கிடையே மேலும் ஒரு துளை இருப்பதும், இதயத்தின் வலதுபுறத்தில் அதிக சதை வளர்ந்திருப்பதும், பல்மோனரி வால்வு இல்லாமை மற்றும் அதனால் ஏற்படும் ரத்தக்கசிவு, மகாதமணியில் ஆணுவரிசம் எனப்படும் பெரிய மகாதமணி அழற்சி நோய், அதிக கால்சியம் படிந்த ரத்தம் கசியும் அயோர்டிக் வால்வு என ஏழு குறைபாடுகள் நாராயணசாமியின் இதயத்தில் கண்டறியப்பட்டன.

டாக்டர் பாஷி தலைமையில் டாக்டர்கள் ஹரிலால், கண்ணன், சிவகுமார், அஜிஜேக்கப், ஜோட்ஸ்னா ஆகியோர் அடங்கிய குழுவினர் ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை மூலம் ஏழுவிதமான குறைபாடுகளையும் சரிசெய்தனர். உலகிலேயே முதல் முறையாக இதுபோன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நாராயணசாமி தற்போது நலமாக உள்ளார்.

மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ் கூறுகையில்,

"இதயத்தில் ஏற்பட்டிருந்த ஏழுவிதமான குறைபாடுகளை ஒரே நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து மியாட் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். மியாட்டில் உள்ள அறுவை சிகிச்சை அரங்குகள் நவீனமாக்கப்பட்டுள்ளன. இதனால், சிக்கலான அறுவை சிகிச்சைகள் கூட வெற்றிகரமாக செய்யப்படுகின்றன,' என்றார்.

டாக்டர் பாஷி கூறியதாவது,

நாராயணசாமிக்கு அதிக மூச்சுத்திணறல் இருந்ததால், அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி அவருக்கு, அதிக ஆபத்து கொண்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சையின் போது, மகாதமணியில் இருந்து நுரையீரலுக்கு ரத்தம் கொண்டு செல்லும் நாளங்களை சரிசெய்வது மிகவும் கடினம். இந்த சிகிச்சை "கேத்லேப் கத்திடரைசேசன்' முறையில் அளிக்கப்பட்டதால் ஆபத்து தவிர்க்கப்பட்டது. பின், இரண்டு அசாதாரண ரத்த நாளங்கள் நுரையீரலுக்கு ரத்தம் செலுத்துவது அடைக்கப்பட்டது. பின், வென்ட்ரிக்கல் செப்டம் எனப்படும் இதய அறைகளுக்கிடையேயான துளை அடைக்கப்பட்டது. அடுத்ததாக ஏட்ரியல் செப்டம் எனப்படும் இதய அறைகளுக்கிடையேயான துளை சரிசெய்யப்பட்டது. இதயத்தில் வலதுபுறம் இருந்த அதிகப்படியான தசைகள் அகற்றப்பட்டன. பல்மோனரி வால்வு மாற்றியமைக்கப்பட்டது.

மகாதமணி அழற்சியை, செயற்கை தமணி மூலம் சரிசெய்து, இதய ரத்த நாளங்கள் மறுபடியும் இணைக்கப்பட்டது. ஆயோர்டிக் வால்வு மாற்றியமைக்கப்பட்டது. மொத்தம் 6 மணி நேரம் கொண்ட இந்த அறுவை சிகிச்சையின் போது, எட்டு யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக ஏழுவிதமான குறைபாடுகள் ஒரே நேரத்தில் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு டாக்டர் பாஷி கூறினார்.

ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்த பரிந்துரை


ரத்த உறைவை தடுக்கவும், ரத்த ஓட்டத்தை சீரமைக்கவும் உதவும் ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம், என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரிட்டனில் உள்ள ரோவெட் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானி ஆசிம் தத்தா ராய் இது குறித்து குறிப்பிடுகையில்,"வயதானவர்கள் தங்கள் உடலின் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தி கொள்ள, தினமும் சிறிதளவு ஆஸ்பிரின் மருந்தை உட் கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக இந்த மருந்தை உட்கொள்வதால், வயிற்றில் புண் ஏற்பட்டு விடுகிறது. இதனால், சிலருக்கு வயிற்றில் ரத்தக் கசிவும் காணப்படுகிறது. நாம் தினமும் பயன்படுத்தும் தக்காளியின் விதையில் உள்ள நிறம் மற்றும் வாசனையற்ற பிசுபிசுப்பான பொருள், ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ரத்தம் உறைவதையும் தடுக்கிறது. எனவே, ஆஸ்பிரின் மருந்துக்கு பதில் தக்காளியை பயன்படுத்தலாம்' என்றார்.

இந்த கண்டு பிடிப்பை தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளில், தக்காளியின் இந்த பகுதியை தனியாக எடுத்து, பசை வடிவில் தயாரித்து விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தக்காளியின் இந்த பசை பகுதி சில பானங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது.